டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் பரபரப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு காலதாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்காததால் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-02 19:12 GMT

உதவி பொறியாளர் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் உதவி பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 1,471 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தன. தேர்வு காலை 9.30 மணி தொடங்கும் எனவும், தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலை 9 மணிக்குள் வந்தவர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 5 நிமிடம் தாமதமாக வந்த சிலரை தேர்வு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வெளியூரில் இருந்து வர சற்று காலதாமதமானதாகவும், தேர்வு எழுத அனுமதிக்கும் படியும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தேர்வு தொடர்பான சுற்றறிக்கையை அவர்களிடம் காட்டி விளக்கினர்.

போராட்டம்

இந்த நிலையில் தாமதமாக வந்த 25 பேர் தேர்வு மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் தேர்வு மைய அதிகாரிகள், காலதாமதமாக வந்தவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். இதனால் தேர்வு எழுத முடியாமல் அவர்கள் பரிதாபத்துடன் திரும்பி சென்றனர். சற்று மனிதாபிமானத்தோடு அனுமதித்திருந்தால் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்திருக்கும் என புலம்பியபடி அவர்கள் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்