தபால் ஓட்டு- படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-03-25 06:09 GMT

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க படிவம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ளது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85- வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக 12டி படிவம் வினியோகம் செய்யும் பணி கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்தனர். இந்த பணிக்காக சென்னை மாவட்டத்தில் 4,676 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில்,நேற்று வரையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 85-வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 45 ஆயிரத்து 716 விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு, 4 ஆயிரத்து 236 பேரிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு 9 ஆயிரத்து 639 விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு, 794 பேரிடம் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

இதுவரையில், மொத்தம் 55 ஆயிரத்து 355 படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 30 படிவங்கள் மட்டுமே பெறப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த படிவம் கொடுப்பதற்கும், நிரப்பிய படிவத்தை சமர்ப்பிப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்