சங்கரன்கோவிலில் வியாபாரிகள் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவிலில் வியாபாரிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-12-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுவாமி சன்னதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. சுவாமி சன்னதியின் நுழைவு வாயில் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.

இதுகுறித்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி அதிகாரிகள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள், மண்டகப்படிதாரர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பண்டிகை காலங்களில் மட்டுமே இந்த தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும், மற்ற காலங்களில் அமைக்கக் கூடாது எனவும் பேசி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசாரால் அந்த தடுப்பு மீண்டும் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லக்கூடாது என கூறி உள்ளனர். இதனால் அந்த பகுதி வியாபாரிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதி வியாபாரிகள், சுவாமி சன்னதியின் முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்று (வெள்ளிக்கிழமை) அந்த இடத்தை அளந்து இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்குரிய இடங்களை தேர்வு செய்து அதன் பின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என கூறியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்