அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வால்பாறை மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
வால்பாறை
வால்பாறை மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நகராட்சி கடைகள்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை வசூல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள், மார்க்கெட் பகுதியில் அதிகரித்து வரும் அனுமதி இல்லாத கடைகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு தொழில் முடங்கி உள்ளதாகவும், இதனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை தங்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நகராட்சி மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளை அகற்றி தங்களுக்கு வியாபாரம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பழைய பஸ் நிலையம் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை செலுத்த முடியும்.
மேலும் கடைகளை உரிய பராமரிப்பு செய்து தர வேண்டும். பல்வேறு நகராட்சியில் கடை வாடகை குறைப்பு செய்தது போன்று வால்பாறை நகராட்சியிலும் வாடகையை குறைக்க வேண்டும் என்றனர்.