தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,309 டன் உரங்கள் வந்தன2 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,309 டன் யூரியா உரம் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உரம் வந்தது
தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை உடனுக்குடன் வழங்க வசதியாக தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,309 டன் யூரியா உரம் தர்மபுரி ரெயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் நடைபெற்றது.
பிரித்து அனுப்ப நடவடிக்கை
அதன்படி தர்மபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 783 டன் யூரியா அனுப்பப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 126 டன் யூரியா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 400 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த பணியை தர்மபுரி மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மண்டல மேலாளர் முருகானந்தன், வி்ற்பனை அலுவலர் நாகராஜ், மொத்த விற்பனையாளா் சப்தகிரி பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் அரசு மானிய உரங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.