சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரியில் பலத்த மழை பெய்தது. சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை கொட்டியது.

Update: 2022-08-05 16:05 GMT

ஊட்டி,

நீலகிரியில் பலத்த மழை பெய்தது. சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை கொட்டியது.

தண்ணீர் தேங்கியது

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

பசுமாடு பலி

ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு, எச்.பி.எப். மற்றும் கல்லட்டி 4-வது கொண்டை ஊசி வளைவு, எமரால்டு சாலை, குந்தா, பெர்ன்ஹில் உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தலைகுந்தா காந்திநகர் பகுதியில் மரம் விழுந்ததில் ராஜ்குமார் என்பவரது பசுமாடு ஒன்று இறந்தது. அவருக்கு நிவாரண தொகையாக ரூ.30 ஆயிரம் வருவாய்த்துறையினர் வழங்கினர். சேரிங்கிராஸ் பகுதியில் மின் கம்பம் சாய்ந்து மரம் மீது விழுந்தது. மின்சார துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் உலிக்கல் சாலையில் 2 இடங்களில் 3 மரங்கள் சாய்ந்து விழுந்தன.

பயிர்கள் மூழ்கின

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 4 நாட்களில் 35 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் முன்எச்சரிக்கையாக 3 நிவாரண முகாம்களில், 32 குழந்தைகள் உள்பட 80 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சில இடங்களில் விளைநிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

சிம்ஸ் பூங்காவில் இருந்து தேயிலை வாரியம் செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-74, நடுவட்டம்-154, கிளன்மார்கன்-71, கல்லட்டி-44, எமரால்டு-60, அப்பர்பவானி-140, அவலாஞ்சி-200, கோத்தகிரி-56, கூடலூர்-75, தேவாலா-181, செறுமுள்ளி-24, பந்தலூர்-110, ஓவேலி-73 மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவானது. 

Tags:    

மேலும் செய்திகள்