பழுதடைந்த சாலையால் பழங்குடியின மக்கள் அவதி

தாவரவியல் பூங்கா அருகே பழுதடைந்த சாலையால் பழங்குடியின மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-14 20:30 GMT

ஊட்டி

தாவரவியல் பூங்கா அருகே பழுதடைந்த சாலையால் பழங்குடியின மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பூங்காவுவிற்கு உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பூங்கா வழியாக ராஜ்பவன் (கவர்னர் மாளிகை), நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

இதற்கிடையே நகரில் இருந்து தாவரவியல் பூங்கா வழியாக ராஜ்பவன், முகாம் அலுவலகம் வரை சாலை நல்ல நிலையில் உள்ளது. ஆனால், அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் நிலைமை இதைவிட மோசமாக மாறிவிடுகிறது.

மாணவர்கள் அவதி

இதனால் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வழியாக தினமும் நகராட்சி வாகனம் குப்பைகளை அகற்ற வந்து செல்கிறது. அந்த வாகனம் குண்டும், குழியுமான சாலையால் கவிழ்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோடர் இன மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி நகராட்சியை பொருத்தவரை 150 கி.மீ. தூர சாலை நகராட்சி கட்டுப்பாட்டிலும், 50 கி.மீ. சாலை தனியார் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதுதவிர மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் தோடர் கிராமத்திற்கு செல்லும் சாலை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வளர்ச்சி திட்ட பணிகளை தோட்டக்கலைத்துறை தான் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கவர்னர் மாளிகையில் இருந்து தோடர் மந்து செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இதுவரை ஒப்புதல் வரவில்லை. இதுதொடர்பாக கலெக்டருக்கு தகவல் தெரிவித்து சிறப்பு அனுமதி ெபற்று நெடுஞ்சாலைத்துறை மூலம் இந்த சாலையை சீரமைக்க திட்டமிட்டு உள்ளோம். அவர்களும் வந்து சாலையை பார்வையிட்டு சென்று விட்டனர். விரைவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்