ரெயில் மோதி மெக்கானிக் பலியானார்.
மெக்கானிக்
திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் பாலாஜி (வயது 34). மெக்கானிககான இவர் நேற்று முன்தினம் இரவு கணேசபுரம் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த பொன்மலை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலிபேஸ்ட் தின்றவர் சாவு
*மாயவரத்தை சேர்ந்தவர் விஜயபாலன் (38). இவர் திருச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்சில் கடந்த 2-ந்தேதி பயணம் செய்தார். பஸ் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் சென்ற போது, விஜயபாலன் திடீரென வாந்தி எடுத்தார். இதனால் பஸ் டிரைவர் அவரை இறக்கி விட்டுள்ளார். இதனையடுத்து விஜயபாலன் மயங்கி விழுந்தார். இதை கண்ட உமையாள்புரம் பகுதி மக்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் எலி பேஸ்ட் தின்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு கடித்து விவசாயி சாவு
*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தை அடுத்த சிப்பாய் பண்ணையைச் சேர்ந்தவர் முருகேசன் (48). விவசாயியான இவர் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்து கொண்டிருந்தபோது, பாம்பு கடித்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள் முறையீடு
*மணப்பாறையை அடுத்த சித்தானத்தம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு தங்கள் வேலை அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் என்று குறிப்பிடவில்லை என்றும், அதை குறிப்பிட்டு தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டனர். அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
காவிரி ஆற்றில் முதியவர் பிணம்
*திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஓயாமரி சுடுகாடு எதிரில் காவிரி ஆற்றில் 71 வயது மதிக்கதக்க முதியவர் பிணமாக மிதந்து வந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இறந்தவர் தனது உடலில் பூணூல் மற்றும் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அவரது சட்டையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பிரின்ஸ் டெய்லர் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.