தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2023-11-03 12:19 GMT

சென்னை, 

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் புலன்விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலன்விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை தமிழக அரசுக்கு கிடைக்கப்பெற்றதா என்பது குறித்து பதிலளிக்க தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மீண்டும் விசாரணை செய்த நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஹென்றி திபேனின் புகார் பற்றிய பதிவுகள் இடம்பெறாதது ஏன்? எனவும், புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதில் உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்ற அறிக்கை தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து எந்தவித அறிக்கையையும் பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன் மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தது. இந்த அறிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் எந்தவித மேல் நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனை கேட்ட நீதிபதிகள் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை செய்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்