உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தைஅரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்

உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-07-28 18:45 GMT

உத்தமபாளையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் செய்து வருவதால் கட்டிடங்கள் வலுவாக உள்ளது. ஆனால் அலுவலகத்தில் இட பற்றாக்குறை காரணமாக அலுவலர்கள் பணி செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலகத்துக்கு அங்குள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பழைய தாலுகா அலுவலக கட்டிடம் எவ்வித பயன்பாடு, போதிய அளவு பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். பழைய தாலுகா அலுவலகம் வளாகத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்திரி தாலுகா அந்தஸ்து பெற்ற தலைமை மருத்துவமனையாக உள்ளது. ஆனால் போதிய கட்டிட வசதி இல்லை. இதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்