வள்ளலார் சர்வதேச மையம் - ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

Update: 2024-05-10 12:07 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் கட்டடம் கட்டவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தபோது, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 106 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சத்யஞான சபை அப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் விருப்பம் என்றும், பெருவெளியில் கட்டிடம் கட்டப்படுவது வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறானது என்றும் வாதிட்டார்.

அப்போது, அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஜூன் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்