வெண்ணந்தூர் அருகேகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-02-23 19:00 GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே கோம்பைக்காடு மலைப்பகுதியில் உள்ள அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பழமையான மாரியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அண்ணாமலைப்பட்டி, கோம்பைக்காடு, பொன்பரப்பிபட்டி, கரட்டுப்பாளையம் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் மாசி மாத திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அண்ணாமலைப்பட்டி கிராம மக்கள் திருவிழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த தனிநபர் கோவில் நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோவில் இடத்தில் மாடுகளை கட்டி அதற்கு தீவனத்தை போட்டு வைத்தார். மேலும் கோவிலுக்குள் கிராம மக்கள் நுழையாமல் இருக்க முட்செடிகளை போட்டு ஆக்கிரமித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் பகுதியில் திரண்டனர். பின்னர் கோவிலில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்தும், அதனை அகற்றகோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெண்ணந்தூர் போலீசார் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்