தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார்

பெரியகுளம் அருேக உள்ள கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-01-20 18:45 GMT

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவரிடம் புகார் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். கூட்டம் முடிந்தவுடன் மனு கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனால், அந்த மக்கள் அங்கு நிறுத்தப்பட்ட கார்களின் முன்பு தரையில் அமர்ந்து காத்திருந்தனர். கூட்டம் முடிந்தவுடன், அவர்கள் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அதில், தங்கள் ஊரில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும், வழிபாடு நடத்தி வந்த கோவிலை சிலர் பூட்டி வைத்துக் கொண்டு பிரச்சினை செய்வதாகவும் கூறியிருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். கலெக்டரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்