மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.;
அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் தொடங்கியதும் புதிதாக கட்டப்பட்ட நகரமன்ற கூடத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோல்டுசேகர், வக்கீல் ராதிகா செந்தில், கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல், பத்மாவதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நகரமன்ற கூடத்திற்கு கருணாநிதியின் பெயரை வைப்பது ஏற்புடையதல்ல என்று கடும் வாக்குவாதம் செய்ததோடு நகரமன்ற கூடத்திற்கு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டு பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றவில்லை. 1-வது வார்டில் குடிநீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. 9-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்துவருகிறது, பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் சரிசெய்யப்படவில்லை, எங்களுடைய வார்டுகளில் மக்கள் பணிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல் பா.ஜ.க. கவுன்சிலர் வடிவேல்பழனியும், தனக்கு தனியாக இருக்கை ஒதுக்கக்கோரியும், நகரமன்ற கூடத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வலியுறுத்தியும் வெளிநடப்பு செய்தார்.