14-ந் தேதி காலை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்

மீன்பிடி தடைக்காலம் நிறைவையொட்டி 14-ந் தேதி காலை கடலுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2023-06-07 21:52 GMT

சேதுபாவாசத்திரம்;

மீன்பிடி தடைக்காலம் நிறைவையொட்டி 14-ந் தேதி காலை கடலுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மண்டபம் பாலசுப்பிரமணியன், ஜாகிர், பாலன், சோழியக்குடி கோபி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் அசன் முகைதீன், ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் உத்திராபதி, தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனுமதிக்க வேண்டும்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் தான் விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்லமுடியும். மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால் 15-ந் தேதி(வியாழக்கிழமை) காலை தான் கடலுக்கு செல்ல முடியும். 15-ந்தேதி வியாழக்கிழமை மறுநாள் வெள்ளிக்கிழமை. எனவே 14-ந் தேதி காலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

அனைத்து படகுகளுக்கும்...

தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் மீன், இறாலுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலை டீசலை 1800 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலம் உருவாக்கி 23 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் மேம்படவில்லை.எனவே மீன்பிடி தடைக்காலத்தை நாட்டுப்படகு, விசைப்படகு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து படகுகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்