திருச்செங்கோடு அருகே ரூ.400 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

Update:2023-05-09 00:15 IST

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு அருகே ரூ.400 கோடி மதிப்பிலான கூட்டுகுடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிப்பாளையத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 669 ஊரக குடியிருப்புகள், ஆலம்பாளையம், படைவீடு பேரூராட்சிகள் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி குடியிருப்புகளுக்கு ரூ.399 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கணேசமூர்த்தி எம்.பி., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகள் துறை இயக்குனர் கிரன் குர்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கடந்த ஆட்சியில் ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர். ஆனால் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி, நாமகிரிபேட்டை சீராப்பள்ளி, பட்டணம், ஆர்.புதுப்பட்டி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், அத்தனூர், மல்லசமுத்திரம் பேரூராட்சிகள் மற்றும் ராசிபுரம், வெண்ணந்தூர், புதுச்சத்திரம், நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் 5.14 லட்சம் மக்கள் பயன்பெறும் விதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும்.

அடிப்படை வசதிகள்

தி.மு.க. அரசு அனைத்து கிராமம் மற்றும் நகர பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிட முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி நாமக்கல் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாமக்கல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையான நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது, முதல்-அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறாக நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இந்த மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், இந்த அரசு நிறைவேற்றும் என இந்த நேரத்தில் நான் உறுதியாக கூறி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் சந்திர சேகர், உதவி கலெக்டர் கவுசல்யா, நகர்மன்ற தலைவர்கள் நளினி, விஜய் கண்ணன், செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்