கள்ளிக்குடி பகுதியில் விபத்தில் மான்கள் இறப்பதை தடுக்க 4 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி- வனத்துறையினர் நடவடிக்கை

கள்ளிக்குடி பகுதியில் விபத்தில் மான்கள் இறப்பதை தடுக்க 4 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-04-25 21:09 GMT

பேரையூர்

கள்ளிக்குடி பகுதியில் விபத்தில் மான்கள் இறப்பதை தடுக்க 4 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மான்கள் இறப்பு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் கடித்தும், வாகன விபத்திலும் மான்கள் தொடர்ந்து இறந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் விபத்திலும், நாய்கள் கடித்தும் இரண்டு மற்றும் மூன்று மான்கள் இறந்து வருவது தொடர் கதையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் பெரும் புதர்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலையில் தண்ணீர் தேடி மான்கள் வெளியே வரும் போது இறக்கிறது.

இதுகுறித்த பல்வேறு புகாரின் பேரில் சாப்டூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாப்டூர் வனச்சரகர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். தண்ணீருக்காக மான்கள் செல்லும் வழியில் உள்ள 4 இடங்களில் பொக்லைன் எந்திரம் கொண்டு குழிகள் தோண்டி அந்த குழிகளில் தண்ணீர் நிரப்பி உள்ளனர். மேலும் நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் கடக்கும் பாதைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர்.

தண்ணீர் நிரப்பும் பணி

இதுகுறித்து சாப்டூர் வனத்துறை வனச்சரகர் செல்லமணி கூறியதாவது:- கள்ளிக்குடி, சிவரக்கோட்டை பகுதிகளில் விபத்து மற்றும் நாய்கள் கடித்து மாதத்துக்கு இரண்டு முதல் மூன்று மான்கள் வரை இறந்து வருகிறது. புகாரின் பேரில் இப்பகுதியில் வனத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மான்களின் தண்ணீர் தேவைக்காக வனத்துறை சார்பில் 4 இடங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் நெடுஞ்சாலை பகுதியில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் கடக்கும் இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்று விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மான்களின் இறப்பை தடுக்கலாம். இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்