ஆடி தெய்வ திருமண விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-06 18:46 GMT

தெய்வ திருமண விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று மகா அபிஷேகக்குழு சார்பில் 25-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 29-ந்தேதி பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முளைப்பாரி வைக்கப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது. நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரத்திற்கு 108 அடி உயர பிரமாண்ட மாலை சாற்றப்பட்டது. அதன் பின்னர் சீர் தட்டுகளை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி- சவுந்திரநாயகி அம்பாளுக்கும் தெய்வ திருமண விழா நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நால்வர் அரங்கில் நடைபெற்றது. இதையொட்டி ஹோமம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னர் திருமணத்திற்கான தாலியை தேங்காய், பழத்துடன் இருந்த தாம்பூல தட்டில் வைத்து பக்தர்களிடம் காண்பித்தனர். அதனை பக்தர்கள் தொட்டு வணங்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்க கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி-அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி அம்பாளுக்கு தாலி கட்டி ஏற்றுக்கொண்டார். அப்போது பக்தர்கள் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை மணக்கோலத்தில் இருந்த சுவாமிகளின் மீது தூவி மகிழ்ந்தனர்.

மொய் பணம்

இதனைத்தொடர்ந்து மாலை மாற்றும் உற்சவம் நடந்தது. அப்போது கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி-அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி அம்பாள் ஆகியோரது கழுத்தில் இருந்த மாலைகள் அவர்களுக்குள்ளாகவே மாற்றி அணிந்து கொள்ளும் நிகழ்வு பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணத்தை சமர்ப்பித்து மணக்கோலத்தில் இருந்த சாமியை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் தமிழிசை பாடல்கள், 1,008 கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஒயிலாட்டமும், கும்மியாட்டமும், கோலாட்டமும் நடைபெற்றது.

திருவீதி உலா

தொடர்ந்து மாலை 6 மணியளவில் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு வேண்டுபவர்கள் உள்ளிட்டோர் இந்த தெய்வ திருமணத்தில் பங்கேற்றால் சுபகாரியம் நிகழும். பிரிந்த தம்பதியர் சேரவும், 16 பேறுகளை பெறவும் பசுபதீஸ்வரர் அருள்பாலிப்பார் என ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆடி தெய்வ திருமண விழாவில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்