மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.;
எருமப்பட்டி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் மோகனூர் வட்டம் செவந்திபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதையொட்டி செவ்வந்திப்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக மனுக்களை பெற்று வந்தனர். இந்த மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான 215 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.28.80 லட்சம் மதிப்பில் 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வகுப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான ஆணையும், ரூ.1.62 லட்சம் மதிப்பில் 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 41 பயனாளிகளுக்கு ரூ.2.05 கோடி மதிப்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை என மொத்தம் 215 பயனாளிகளுக்கு ரூ.3.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வழங்கினார். ரூ.92.78 லட்சம் மதிப்பீட்டில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகள் துறையின் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இம்முகாமில் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், மோகனூர் வட்டாட்சியர் ஜானகி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோக மணிகண்டன், பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.