21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின்மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு

கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின் மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.;

Update:2023-08-07 02:15 IST


கோவை


கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின் மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.


வெடிகுண்டு வைத்த வழக்கு


கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதானி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 2002-ம் ஆண்டு கோவை உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியில் உள்ள பிரஸ்கிளப், டெலிபோன் பூத் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கும் முன் கைப்பற்றப்பட்டது.


இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வெடி குண்டை வைத்தது, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த முகமது சபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.யின் மதவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளை விசாரணை நடத்தும் எஸ்.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது சபீர் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாகவே உள்ளார்.


லஸ்கர் இ-தொய்பா அமைப்பு


இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு முகமது சபீர், லஸ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. மேலும் முகமது சபீருடன், அவருடைய மனைவி பவுசியா என்பவரும் சேர்ந்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்காகவும் டெல்லி, ஐதராபாத், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு முகமது சபீருடன் சேர்ந்து சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் முகமது சபீர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர் திரும்பி வந்தால் கைது செய்ய இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு உள்ளது.


மனைவியிடம் விசாரிக்க முடிவு


முகமது சபீர் 21 ஆண்டுகளாக தலைமறைவானதால், அவருடைய மனைவி பவுசியா 2-வது திருமணம் செய்து கொண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருகிறார். அங்கு சென்று அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முகமது சபீர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் மனைவி பவுசியாவிடம் போனில் தொடர்பு கொண்டாரா? தற்போது எங்கு பதுங்கி இருக்கிறார்? என்பது உள்ளிட்ட விவரங்களை பெற மனைவி பவுசியாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்