அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது ஏன்?
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது ஏன்? என்பது குறித்து பொள்ளாச்சியில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசினார்.;
பொள்ளாச்சி
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது ஏன்? என்பது குறித்து பொள்ளாச்சியில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசினார்.
மாவட்ட மாநாடு
கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி என்ற பெயரில் மாநாடு, கோவை ரோடு வாஜ்பாய் திடலில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டு கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் வீடுதோறும் கழிப்பிடம், 11 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஏழை மாணவர்களுக்காக 12 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தொழில் தொடங்க உடனடியாக கடன் பெற்று கொடுக்கப்படுகிறது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.150 ஆக குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதையும் மத்திய அரசு நிறைவேற்றும்.
ஏணி வைத்தால் கூட எட்டாது
தமிழகத்தில் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு சலித்துவிட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போதும் வரும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் மத்தியில் பா.ஜனதா ஆட்சி 9 ஆண்டுகளை கடந்தும், மக்களுக்கு சலிப்பு தட்டவில்லை. குண்டூசி அளவிற்கு கூட மத்திய அரசை குற்றம் சாட்ட முடியாது. அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவர்கள் நாட்டை கூறுபோட்டு விற்றுவிட்டனர். பா.ஜனதா ஆட்சியுடன் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை ஒப்பிட்டால், ஏணி வைத்தால் கூட எட்டாது. தமிழகத்தில் வாரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடக்கிறது. சிறுமியிடம் கருமுட்டை எடுத்தல் போன்ற புதிது புதிதாக குற்றங்கள் நடக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தனிப்பெரும்பான்மை
பா.ஜனதா மத வெறி கட்சி என்று கூறுகின்றனர். மணிப்பூர், கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் இருந்தும், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் 9 மாதங்கள் ஆகியும் பதில் வரவில்லை.
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி அதிரிகரித்து உள்ளது. தென்னை நார் தொழிற்சாலைகளை சுற்றுச்சூழல் துறை ஆரஞ்சு பட்டியலில் வைத்து உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும்.
அக்னிபத் திட்டம்
மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக கொண்டு வருவோம். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து 25 பா.ஜனதா எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வார்கள்.
உலக அளவில் இந்திய ராணுவம் 3-வது இடத்தில் உள்ளது. அதை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது இருமுனை தாக்குதல் நடத்தலாம். அதை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் நன்மைக்கான அற்புத திட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் வி.சந்திரன், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.சக்திவேல், மருத்துவ அணி மாவட்ட தலைவர் பி.ஆர்.ஜி. பால்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.ஆல்வா, மாவட்ட செயலாளர்கள் எம்.சுரேந்தரன், எஸ்.ராஜாகுமார், மாவட்ட நிர்வாகிகள் அப்பு, ஆனந்த், கோவிந்தராஜ், வக்கீல் துரை, நகர தலைவர் பரமகுரு மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.