தனிமையில் தவறான பழக்கம் பார்த்து விட்டதால் வீட்டில் தூங்கிய மாணவரை கொலை செய்த பிளஸ்-௨ மாணவர்

வீட்டில் தூங்கிய மாணவரை கொலை செய்தது ஏன்? என்று கைதான பிளஸ்-௨ மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-05-24 19:34 GMT

தா.பழூர்:

பள்ளி மாணவர் கொலை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன்-லலிதா தம்பதியின் மகன்கள் முருகன், மணிகண்டன்(வயது 16). லலிதா உடல்நலக்குறைவால் இறந்ததையடுத்து, மதியழகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வசித்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் தனது தாய்வழி தாத்தா- பாட்டியான ராமசாமி, பாப்பாத்தி ஆகியோரின் பராமரிப்பில் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

மேலும் அரியலூரில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மணிகண்டன் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் தனது தாத்தா வீட்டிற்கு வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

இதில் மணிகண்டனுடன் விடுதியில் தங்கி படித்த சில மாணவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் தா.பழூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்கள் கொடுத்த ரகசிய தகவலின்பேரில் செந்துறை பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் நடந்த நேரத்தில், அந்த மாணவரின் செல்போன் சிக்னல் அதே பகுதியில் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த மாணவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;-

திட்டம் தீட்டினார்

பிளஸ்-2 மாணவர் தனிமையில் தவறான பழக்கத்தில் ஈடுபட்டதை பார்த்த மணிகண்டன், அதனை சக நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால் பிளஸ்-2 மாணவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய மணிகண்டனை கொலை செய்ய அந்த மாணவர் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 22-ந் தேதி காலை 10 மணி அளவில் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு அந்த மாணவர் வந்துள்ளார். பகல் நேரம் முழுவதும் அந்த பகுதியை நோட்டம் விட்டு, சரியான நேரத்தை எதிர்பார்த்து தைல மர தோப்புகளில் மறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இரவு 11 மணி அளவில் மணிகண்டன் படுத்திருந்த வீடு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வாசலில் படுத்திருந்த மணிகண்டனின் தாய்மாமா ரமேஷ், யாரோ வரும் சத்தம் கேட்டு விழித்ததால், மாணவர் அச்சமடைந்து மீண்டும் தைல மர தோப்புக்குள் சென்றுள்ளார்.

பிளஸ்-2 மாணவர் கைது

பின்னர் அதிகாலை 2 மணியளவில் மீண்டும் மணிகண்டன் படுத்திருந்த வீட்டிற்கு வந்த அவர், அருகில் கிடந்த கல்லை தூக்கி, தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த மாணவனின் செல்போன் சிக்னல் 22-ந் தேதி காலை 10 மணி முதல் 23-ந் தேதி 3.30 மணி வரை அதே பகுதியில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இதனால் கொலைவெறியுடன் அந்த மாணவர் சுமார் 17 மணி நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து அந்த மாணவர் ஊருக்குச் சென்ற வழியில் இருந்த பல்வேறு கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார், அந்த மாணவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி அழைத்துச் சென்றனர்.

பள்ளி மாணவரை கொலை செய்ததாக மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்