கணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மனு

ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த கணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2022-12-26 20:01 GMT

ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த கணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.

உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவி தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் ரூ.1¼ கோடியில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு ஆண்டாகியும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. சோமரசம்பேட்டை சித்த மருத்துவமனையை ஆயுஷ் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

அரசு வேலை

இதேபோல, லால்குடி அருகே நெருஞ்சலக்குடியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவர் உறவினர், பொதுமக்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எனது கணவர் மாதவன் எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொருளாளராக இருந்தார். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து அவர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுத்ததால், எனது கணவர் கொலை செய்யப்பட்டார். இதனால் நானும், எனது குழந்தைகளும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எனவே எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அத்துடன் எனது கணவரை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காகித தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் மணப்பாறையை சுற்றியுள்ள 150 கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளின் நீர் மாசுபட்டுள்ளது. எனவே இதனை தடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்