சேலம் பெரியார் மேம்பாலம் கீழ் பகுதியில் மண் குவியல்கள் அகற்றும் பணி தொடக்கம்
சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகில் பெரியார் மேம்பாலம் உள்ளது.;
சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகில் பெரியார் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து சீதாராம் செட்டி தெரு, சத்திரம் வரை ஏராளமான பழைய இரும்பு மற்றும் மரச்சாமான்கள் கடைகள் உள்ளன.
மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், சாக்கடை கழிவுகள், மண் ஆகியவை பெரியார் மேம்பாலம் அடிப்பகுதியில் சாலையோரம் போடப்பட்டன. இதனால் சாலையோரம் மண் குவியல், குவியல்களாக கொட்டி மலைப்போல் காணப்பட்டன. இதுதவிர, பழைய வீடுகளை இடித்த மண் போன்றவையும் அங்கு கொட்டப்பட்டதால் சாலையோரம் மண் குவியல் காணப்பட்டது.
இதனால் சுகாதார சீர்கேடு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். எனவே, பெரியார் மேம்பாலம் அடிப்பகுதியில் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவு களையும், மண் குவியலையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமானது.
இதன் எதிரொலியால் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பெரியார் மேம்பாலம் அடியில் குவிந்து கிடந்த மண் குவியல்கள், குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர்.