ஸ்வயம் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது மாணவர்களுக்கு மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-12-08 11:22 IST

கோப்புப்படம் 

ஸ்வயம் தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்