ரூ.1020 கோடி ஊழல்; அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார்.;
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ. 1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஊழலுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1020 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளது.