வெள்ளக்குடியில், புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்படுமா?

வெள்ளக்குடியில், புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்படுமா?

Update: 2023-01-10 18:45 GMT

சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு வெள்ளக்குடியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடி கிராமத்தில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியில் அமர்ந்து கிராமத்தில் உள்ள வளர்ச்சி பணிகள், கிராம மக்கள் பயன் அடையும் திட்டங்கள் குறித்து அன்றாடம் பணி புரிவதற்கும், அதேபோல் கிராம மக்கள், விவசாயிகளுக்கு தேவையான வீடுகள்- வயல்களுக்கு உள்ளிட்ட பயன்பாடுகள் குறித்த சான்றிதழ்களை பெறுவதற்கும் இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

பழங்கால குகை போல்

கட்டிடத்தின் மீது பூசப்பட்ட சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கற்கள் தெரிவதுடன், மழை தண்ணீர் பட்டு கற்கள் சேதமாகி விரிசல்கள் ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டிடம் மேற்கூரை உள்பட சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு மழை தண்ணீர் உள்ளே செல்வதாகவும், இதனால் ஆவணங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும், சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பார்ப்பதற்கு பழங்கால குகை போல இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எந்தநேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்