கல்லணை கால்வாய் கரையில் ரெயில்வே லெவல் கிராசிங் அமைக்கப்படுமா?

கல்லணை கால்வாய் கரையில் ரெயில்வே லெவல் கிராசிங் அமைக்கப்படுமா?;

Update:2022-10-24 00:15 IST

பூதலூர் அருகே கல்லணை கால்வாய் கரையில் ரெயில்வே லெவல் கிராசிங் அமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கல்லணை கால்வாய்

தஞ்சை-திருச்சி ெரயில் வழித்தடத்தில் ஏராளமான சிறு கிராமங்களை இணைத்தவாறு ெரயில்கள் சென்று வருகின்றன. கிராமங்களை கடந்து செல்லும் வழிகளில் ஆங்காங்கே லெவல் கிராசிங் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் பல இடங்களில் கீழ் பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.

தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் கல்லணை கால்வாய் எனப்படும் புது ஆறு இரண்டு இடங்களில் ெரயில் வழித்தடத்தை குறுக்கிட்டு செல்கிறது. இதில் பூதலூர் ஒன்றியம் சோளகம்பட்டி ெரயில் நிலையத்திற்கும், அய்யனாபுரம் ெரயில் நிலையத்திற்கும் இடையே கல்லணை கால்வாய் பாலத்தின் மீது ெரயில் வழித்தடம் உள்ளது.

ஆளில்லாத ரெயில்ேவ கேட்

இந்த ெரயில் வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதை இருந்தபோது வாகனங்கள் கடந்து செல்ல ஆளில்லாத ெரயில்வே கேட் கல்லணை கால்வாய் கரையில் இருந்தது. இந்த வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் இலகுரக வாகனங்கள் சென்று வந்தன.

இதனால் விண்ணனூர்பட்டி, காங்கேயன்பட்டி, சின்ன காங்கேயம் பட்டி ஆகிய ஊரில் உள்ள விவசாயிகள் கல்லணை கால்வாய் வழித்தடத்தை கடந்து அருகில் உள்ள மாரனேரி, கடம்பன்குடி, சோளகம்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று வருவதற்கு சுலபமான ஒரு வழியாக இருந்து வந்தது.

வாகனங்கள் செல்ல முடியாத நிலை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் இந்த வழித்தடத்தில் அகல ெரயில் பாதை சற்று உயரமான பகுதியில் அமைந்து விட்டதால் கல்லணை கால்வாய் கரை வழியாக எந்தவித வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து முழுவதும் தடைபட்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிறிய தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கும் சுற்றிச் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட கல்லணை கால்வாய் கரையில் வாகனங்கள் செல்லக்கூடிய அளவிற்கு ெரயில் பாதையை சரி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், இந்த பகுதி விவசாயிகளும் ெரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை எழுப்பியும் ஏனோ இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

லெவல் கிராசிங்

இரண்டு பகுதி கிராமங்களையும் இணைக்கும் வகையில் கல்லணை கால்வாய் கரையில் ெரயில் வழித்தடத்தை கடக்கும் வகையில் ஒரு லெவல் கிராசிங் அமைத்து தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் சோளகம்பட்டியை சேர்ந்தவருமான ராஜா என்பவர் கூறியதாவது:-

பேரிடர் காலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள லெவல் கிராசிங் இல்லாத நிலை உள்ளது. எனவே பேரிடர் காலங்களை கருத்தில் கொண்டு கரை காவலர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைவாக சென்று கரைகளை பார்வையிடுவதற்கும், செப்பனிடுவதற்கும் ஏதுவாக மேற்கண்ட இடத்தில் ெரயில்வே நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் லெவல் கிராசிங் அமைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

போக்குவரத்துக்கு ஏற்பாடு

இது குறித்து சமூக ஆர்வலர் கண்ணதாசன் கூறியதாவது:-

ெரயில் பாதைகள் அமைக்கும்போது எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு அன்றைய ஆட்சியாளர்கள் அமைத்தனர். அதேபோல ஆறுகளின் குறுக்கே பாலங்களில் ெரயில்பாதை அமைக்கும்போது பேரிடர் காலங்களில் கரைகளை பாதுகாக்கும் வகையில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக லெவல் கிராசிங்குகளையும் அமைத்தனர்.

வேகமாக மாறிவரும் தற்போதைய காலகட்டத்தில் நவீன மயம், நாகரிக மையம் என்ற போர்வையில் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து விட்டால் பேரிடர் சமயத்தில் எளிதில் சம்பந்தப்பட்ட இடங்களை அடைய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். அது போன்ற ஒரு சூழ்நிலை தான் கல்லணை கால்வாய் கரையில் முன்பு இருந்த லெவல் கிராசிங் மூடப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் கல்லணை கால்வாய் கரையில் லெவல் கிராசிங் அமைத்து வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றார்.

இதே கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்