போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மூங்கில் மரங்கள் அகற்றப்படுமா?

கூத்தாநல்லூர் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மூங்கில் மரங்கள் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-10-03 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மூங்கில் மரங்கள் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மூங்கில் மரங்கள்

வடபாதிமங்கலத்தில் இருந்து, கூத்தாநல்லூர் செல்லும் சாலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த சாலை வெண்ணாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளதால், புனவாசல், பழையனூர், நாகங்குடி, காடுவெட்டி போன்ற ஊர்கள் வரை ஆற்றின் கரையோரத்தில் அடுத்தடுத்து மூங்கில் மரங்கள் அடர்ந்த காடுகள் போன்று சூழ்ந்துள்ளன.

அகற்ற வேண்டும்

இந்த மூங்கில் மரங்கள் சாலை பகுதி வரை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் மீது மூங்கில் முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மூங்கில் மரங்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் திடீரென சாலையில் சாய்ந்து நிற்கும் மூங்கில் மரங்களில் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும், மூங்கில் மரங்கள் அடர்ந்த காடுகள் போல் உள்ளதால், இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் மறைந்திருக்கும் கூடாரமாகவும் மாறி வருகிறது. இத்தகைய மூங்கில் மரங்களால், அவ்வழியே சென்று வரக்கூடியவர்கள் சிரமத்தை அடைகின்றனர்.இதனால், ஆற்றின் கரையோரம் மற்றும் சாலைகளில் படர்ந்து இடையூறு ஏற்படுத்தக்கூடிய மூங்கில் மரங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்