ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படுமா?
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தடுப்பு பிரிவு
தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது. ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் தற்போது இம் மாதம் முதல் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
956 ரேஷன் கடைகள்
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் நுகர் பொருள் வாணிபக்கழகம் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் 956 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்புறங்களில் இந்த ரேஷன் கடைகள் கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்கள் மூலம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ்ந்தநிலையில் சமீப காலமாக மத்திய அரசு பொது வினியோகத்திற்கான ரேஷன் கோதுமை அளவை வெகுவாக குறைத்து விட்ட நிலையில் ரேஷன் கடைகளில் 20 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூட கோதுமை வினியோகம் செய்யப்படாத நிலை நீடிக்கிறது. மேலும் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்திலும் அவ்வப்போது பிரச்சினைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் கடத்தல்
மாவட்டத்தில் ரேஷன் வினியோக முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும் ரேஷன் அரிசி வினியோக மையங்களிலிருந்து கடத்தப்படுவது தொடர்கிறது. கண்காணிப்பு அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் மொத்தமாக வினியோக மையங்களில் இருந்து கடத்தப்படுவது தான் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு வழிவகுக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலை உள்ளது.
வினியோக மையங்களை முறையாக கண்காணித்தால் கடத்தப்படுவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி ஆயினும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்களை வினியோகிக்கும் நிலையில் அதனை முறைகேடாக கடத்தி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கும் நடைமுறையை தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கண்காணிப்பு குறைபாடு
இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ெபாதுமக்கள் கூறியதாவது:-
செந்தில்குமார் (மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் விருதுநகர்):-
ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கோதுமையை முழுமையாக எடுத்து வழங்கி வருகிறோம். ஆனாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைவான ஒதுக்கீடு வருவதால் முழுமையாக கோதுமை வழங்கப்படாத நிலைநீடிக்கிறது. ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்காணிப்பு குறைபாட்டால் என கூற முடியாது.
ரேஷன் அரிசி கடத்துபவர்கள் பொது மக்களிடமிருந்து சேகரிக்கும் நிலை உள்ளது. அதனை எங்களால் தடுக்க முடியாது. உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தான் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு பறக்கும் படை
மாரிமுத்து (மாவட்ட வழங்கல் அலுவலர்):-
விருதுநகர் மாவட்டத்திற்கு பொது வினியோகத்திற்கு தேவைப்படும் கோதுமை அளவில் 7 சதவீதம் தான் வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் கோதுமை ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் கடைகளில் வினியோகம் முறையாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் இதற்காக பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக கூடுதல் சிறப்பு பறக்கும் படை அமைக்க மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிசி கடத்தல் அதிகரிப்பதற்கு கடத்தல்காரர்கள் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை சேகரிக்கும் நிலை உள்ளது. மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் விற்பனையாளரிடம் தங்களுக்கு அரிசி தேவை இல்லை என்றும் பட்டியலில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டு செல்லும் நிலை உள்ளது. இதனை எங்களால் தடுக்க முடியாது. எனினும் வெளிச்சந்தைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தான் தடுக்க வேண்டும்.
குண்டர் சட்டத்தில் கைது
ஆல்பின் பிரிட்ஜிட் மேரி (உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்):-
விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த காலங்களை விட தற்போது கடத்தலில் ஈடுபடுபவர்கள் முழுமையாக கைது செய்யப்படுகின்றனர். வினியோக மையங்களில் இருந்து அரிசி வெளிச்சந்தைக்கு அனுப்பப்படுவதை சோதனையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை.
மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 2 மாதங்களில் கடந்த ஆண்டை விட ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது. தற்போது ஆலங்குளத்தை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட சுபாஷ் என்பவரையும், எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்படுவதை தடுக்க இயலாது. ரேஷன் கடைகளில் பழைய நடைமுறைபடியான வினியோக முறை இருந்தால் ஆவணங்களை சரிபார்க்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் தற்போது எல்லாம் கணினி அடிப்படையில் இருப்பதால் ஆவணங்களை சரி பார்ப்பதற்கும் வாய்ப்பில்லை. எனினும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ரகசிய தகவலின் அடிப்படையில் எடுத்து வருகிறோம்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
மீனாட்சி சுந்தரம் (சமூக ஆர்வலர், செவலூர்):-
மாவட்டத்தில் நாள் தவறினாலும் ரேஷன் அரிசி கடத்தல் தவறுவதில்லை. அதிகாரிகள் தரப்பிலும், போலீஸ்தரப்பிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு வந்தாலும் நடைமுறையில் ரேஷன் அரிசி கடத்தல் குறைவதாக தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் மக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதனை வெளிச்சந்தைக்கு கொண்டு செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுமக்களும் இதனை உணர்ந்து ரேஷன் அரிசி கடத்துவோருக்கு ஒத்துழைப்பு தருவதை தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகள் நடவடிக்கை
ராஜபாளையத்தை சேர்ந்த ரேவதி:- பொதுவாக மிகவும் வறுமையில் வாழும் மக்களும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது.
எண்ணற்ற பேர் ரேஷனில் வாங்கும் அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள். இதை சிலர் ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி மூடையாக பல்வேறு இடங்களில் மொத்தமாக பதுக்கி வைக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய ரேஷன் அரிசி கிடைக்காமல் போகிறது. ரேஷன் பொருட்களை கடத்துவதை தடுக்க அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான அரிசி
பாலையம்பட்டியை சேர்ந்த இருளப்பன்:-
அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது. பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள்களில் மூடை மூடையாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. பொதுமக்கள் வாங்கும் ரேஷன் அரிசியையும் ஒரு சில கும்பல் விலைக்கு வாங்கி சரக்கு வாகனங்களில் வெளியூருக்கு கடத்திச் செல்கிறது. அரசு ஏழை மக்களுக்கு மானியமாக வழங்கும் இலவச அரிசி சாதாரணமாக கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. அரசு வழங்கும் அரிசி தரமாகவும், உரிய முறையில் அவர்களுக்கு சென்று அடையவும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தவிர்க்க அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்களும் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் தான் இந்த முறைகேடான நடைமுறையை முழுமையாக தவிர்க்க வாய்ப்பு ஏற்படும் என்பது மட்டும் உறுதி.