உதவி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

மகளிர் உரிமைத்தொகை கேட்டு நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-10-16 18:50 GMT

தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு 2-வது தவணையாக ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண் விடுபட்டிருந்தால், இ.சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த மனுக்களை உதவி கலெக்டர்கள் விசாரித்து தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு அனுமதி வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்பனை, மானூர் தாலுகா தெற்கு அச்சம்பட்டி, நாஞ்சான்குளம், தெற்குப்பட்டி மற்றும் நாங்குநேரி அருகே உள்ள கீழ அரியகுளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2-வது மாத தொகையும் வழங்கி விட்டார்கள். ஆனால் ஏழை, எளிய பெண்களாகிய எங்களுக்கும் உடனடியாக உரிமைத்தொகை தர வேண்டும்.

ரேஷன் கடைகளில்...

அதற்கு இ.சேவை மூலம் விண்ணப்பிப்பதிலும், அதற்கு ஒப்புதல் வழங்குவதிலும் பல முரண்பாடுகள் உள்ளன. தினமும் வேலைக்கு செல்ல முடியாமல் இதற்காக இ.சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் சரியான தகவல் கிடைப்பதில்லை.

எனவே முன்பு போல் ரேஷன் கடைகளில் எங்களது விண்ணப்பங்களை பெற்று, அந்த விண்ணப்பங்களை கொண்டு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து விசாரித்து உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றனர்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்