சிவகங்கையில் மகளிர் சேவை மையம்

தமிழகத்தில் முதன் முறையாக சிவகங்கையில் மகளிர் சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-20 19:43 GMT

சிவகங்கை, 

தமிழகத்தில் முதன் முறையாக சிவகங்கையில் மகளிர் சேவை மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

திறப்பு விழா

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. வாழ்வாதார மையத்தின் செயல் இயக்குனர் பிரேம்குமார் வரவேற்றுப் பேசினார்.

மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

தமிழகத்தில் முதல் மையமாக சிவகங்கையில் மகளிர் சேைவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் புதியதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் எந்த தொழில் தொடங்கலாம் என்பது குறித்தும் அதற்கு தேவையான பயிற்சிகள் பெறுவது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஜி.எஸ்.டி. பதிவு செய்வது...

மேலும் தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலீடுகளைப் பெற தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ளவர்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மையத்தில் தொழில் முனைவோருக்கு ஆலோசனை குழுவுடன் தொழில்முறை வழிகாட்டுதல் சிறு,குறு தொழில்கள் தொடங்க தேவையான சான்றிதழ் பெற்றுத்தருவது, பான் கார்டு பெற்றுத் தருவது, ஜி.எஸ்.டி. பதிவு செய்வது, வருமான வரி பதிவு செய்வது போன்ற பணிகள் செய்து தரப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கைமாறன், மணிமுத்து, சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்