மோதிரத்திற்காக முதியவரை கொலை செய்த வாலிபர் கைது

மோதிரத்திற்காக முதியவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-03 19:15 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 86). விவசாயியான இவர் ஊர் நாட்டார் ஆவார். இவர், கடந்த மாதம் 22-ந் தேதியன்று தனது வயலுக்கு சென்ற நிலையில், அங்குள்ள மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரியலூர் மற்றும் கயர்லாபாத் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும், உறவினர்கள் கோவிந்தசாமியின் உடலை எடுக்க விடாமல் தடுத்ததால், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மோதிரம் திருட்டு

பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் அரியலூர் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையின்போது, கோவிந்தசாமி அணிந்திருந்த 1 பவுன் மோதிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போய் இருப்பதாக போலீசாரிடம் கோவிந்தசாமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து வி.கைகாட்டி பகுதியில் உள்ள அடகு கடைகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நகையை விற்பனை செய்து விட்டு சென்ற ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த அடகு கடையில் அந்த நகையை மீட்டு விசாரித்தபோது, அது கோவிந்தசாமி அணிந்திருந்த மோதிரம் என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அடகு கடையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியை கொண்டு விசாரித்தபோது, அந்த மோதிரத்தை அடகு வைத்தவர் விளாங்குடி சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த வேலுசாமியின் மகன் ராஜேஷ்(வயது 27) என்பது ெதரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கடன் பிரச்சினை மற்றும் குடும்ப வறுமையால் கோவிந்தசாமியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த மோதிரத்தை திருடிச்சென்றது அடகு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்