தொகுதி கண்ணோட்டம்: பூம்புகார்

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சமீபத்தில் பிரிக்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டத்தில் இருந்த 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகளான மயிலாடுதுறை,சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் பூம்புகார் சட்டசபை தொகுதி பொதுத்தொகுதியாகும்.

Update: 2021-03-07 05:48 GMT
இந்த தொகுதி சீர்காழி ஒன்றியத்தில் இருந்து 3 ஊராட்சிகளையும், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் இருந்து 57 ஊராட்சிகளையும், குத்தாலம் ஒன்றியத்தில் இருந்து 45 ஊராட்சிகளையும் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.பூம்புகார் தொகுதி 1977-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளது. அவற்றில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 3 முறையும், பா.ம.க. 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 1980, 1984, 1991, 2001, 2011, 2016-ல் அ.தி.மு.க.வும், 1977, 1989, 1996-ல் தி.மு.க.வும், 2006-ல் பா.ம.க.வும் வெற்றி பெற்றுள்ளது. 2006-ல் பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.2016-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பவுன்ராஜ் 87 ஆயிரத்து 666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் 67 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்றார்.

சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பெருமை பெற்றதும், காவிரி ஆறு வங்க கடலோடு கலக்கும் பெருமை கொண்ட பகுதியாகவும் விளங்குவது காவிரிபூம்பட்டினம் ஆகும். இது காலப்போக்கில் மருவி பூம்புகார் என்ற பெயரோடு தற்போது விளங்கி வருகிறது. இத்தகைய பெருமைபெற்ற இந்த தொகுதி பூம்புகார். சுற்றுலா வளாகம், தரங்கம்பாடி கடற்கரை மற்றும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில், பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட புராதன கோவில்களை உள்ளடக்கிய பகுதியாகவும் இத்தொகுதி விளங்குகிறது. மேலும் நவக்கிரக கோவில்களில் ஒன்றான கேது கோவிலும்(கீழப்பெரும்பள்ளம்) இத்தொகுதியில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தியோடு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியம்மை பிறந்த தில்லையாடி, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இந்த தொகுதியில் தான் உள்ளன. தற்போது சட்டசபை தொகுதிகளின் வரிசையில் பூம்புகார் தொகுதி 162-வது இடத்தை பிடித்துள்ளது. பூம்புகார் தொகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்த பகுதி காவிரி நீரை நம்பியே உள்ளது. மேலும் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் இங்கு உள்ளது.

இந்த தொகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக விளங்குகிறது. வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், மீனவர்கள், நாடார்கள், நாயுடுகள், பிள்ளைமார்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொகுதியில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. தொகுதி முழுவதும் 34 முக்கிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வாணகிரியில் ரூ.34 கோடி செலவில் கடல் அரிப்பு தடுப்பு திட்டம், காவிரி ஆற்றில் உப்புநீர் கலப்பதை தடுக்க 
ரூ..8 கோடியில் பணிகள், தரங்கம்பாடி-மங்கநல்லூர் சாலை ரூ.19 கோடி செலவில் இருவழி சாலையாக மாற்றம், குத்தாலத்தில் கலை அறிவியல் கல்லூரி, தரங்கம்பாடியில் ரூ.5 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 25 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரவிக்கின்றனர்.

பூம்புகாரில் 1974-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது கட்டப்பட்ட பாவை மன்றம், இலஞ்சி மன்றம், சிலப்பதிகார கலைக்கூடம் ஆகியவை தற்போது பராமரிப்பின்றி உள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும். இந்த தொகுதியில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும். சந்திரபாடி மீனவ பகுதிக்கு தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தர வேண்டும். தரங்கம்பாடி பகுதியில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும். விவசாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் எண்ணெய் எரிவாயு குழாய் திட்டங்களை தடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

2016-ம் ஆண்டு பூம்புகார் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 774 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 20 ஆயிரத்து 808 பேர் அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,75,582

ஆண்கள் - 1,35,862

பெண்கள் - 1,39,713

மூன்றாம் பாலினத்தவர்கள் - 7

மேலும் செய்திகள்