தமிழகம் வந்துள்ள சிறப்பு செலவீன பார்வையாளருடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை

இந்திய அளவில் தேர்தல் செலவில் கொடி கட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

Update: 2021-03-08 22:10 GMT
சென்னை, 

இந்திய அளவில் தேர்தல் செலவில் கொடி கட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுகளை பெறுவதற்கு கவர்ச்சியான பொருட்களையும், பணத்தையும் அள்ளிவீசுவதில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இதை தடுப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டும், இதுவரை முழு அளவில் பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த முடியவில்லை.

எனவே இந்த தேர்தலுக்கு முதன் முதலாக சிறப்பு செலவீனப் பார்வையாளர்களை தேர்தலுக்கு முன்பிருந்தே களத்தில் இறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய 2 ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

அவர்களில் மது மகாஜன் நேற்று இரவு சென்னைக்கு வந்தார். இன்று பகல் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அப்போது ஓட்டுக்காக இலவச பொருட்கள், பணப்பட்டுவாடா ஆகியவற்றை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் வகுத்துள்ள ரகசிய திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், இந்த வாரம் சென்னை வந்து, தேர்தல் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்