நெல்லை: ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

நெல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-03-29 09:47 GMT
நெல்லை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே
முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட  முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் டக்கம்மாள்புரத்தில் வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் இன்று வாகனசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்