ஈக்குவடாரில் நிலநடுக்கம் 2 பேர் சாவு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடார் நாட்டை நேற்று நிலநடுக்கம் தாக்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.11 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

Update: 2016-12-20 21:30 GMT
லிமா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடார் நாட்டை நேற்று நிலநடுக்கம் தாக்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.11 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் தென்-தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எஸ்மெரல்தாஸ் நகரில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

இது எஸ்மெரல்தாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். நிலநடுக்கத்தால் பீதியடைந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது 5 கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. மேலும் வீடுகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.

நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு 75 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலநடுக்கத்துக்கு மேலும் ஒருவர் பலியானார்.

அதே போல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்