வீடியோ: ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட மர்ம நபர்.

போலந்து நாட்டில் உள்ள ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கிழே தள்ளிவிட்டு கொலை செய்ய முற்பட்ட நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-01-11 11:05 GMT
போலந்தில் லெஸ்னோ நகரில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், வீல் சேரில் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு ரெயிலில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

இருவரும் நன்றாக பேசியுள்ளனர். அப்போது முதலில் வந்த ரெயிலில் அந்த நபர் செல்ல வேண்டாம் என்றும் அடுத்து வரும் ரெயிலில் செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணும் தமக்கும் உதவியாக இருக்கும் என கருதி சரி என்று அடுத்து ரெயில் வருவதை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த நபர் மாற்றுத்திறனாளி வீல் சேரில் இருந்ததால் அவரை நகர்த்திச் சென்றவாறு பேசியுள்ளார். அப்போது திடீரென்று அவர், வீல் சேரில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ரெயிநிலையத்தின் நடைபாதைக்கு கீழே உள்ள தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, கற்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதைக் கண்ட அருகில் இருந்த சக பயணிகள் இருவர் அவரை தடுத்து, அப்பெண்ணை மீட்டு  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதால் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து இன்னும் சரிவர தகவல் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்