ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் தலீபான் தளபதி உள்பட 33 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் தலீபான் தளபதி உள்பட 33 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-01-13 22:00 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க படைகள் 2014–ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு, அங்கு தலீபான் இயக்கத்தினரின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. அவர்கள் அங்கு முக்கிய நகரங்களை வளைத்துவிட்டு, தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க முடியாமல் உள்நாட்டு படைகள் திணறி வருகின்றன.

ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அவர்கள் அங்கிருந்து உள்நாட்டு படையினருக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

இந்த நிலையில் அங்கு தெற்கு ஹெல்மாண்ட் பகுதியில், கார்ம்சர் மாவட்டத்தில், அரசு அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு தலீபான்கள் திட்டம் தீட்டி வருவதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அவற்றின்பேரில், அங்கு நேற்று முன்தினம் உள்நாட்டு போர் விமானங்கள் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதலில் தலீபான்களின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மவுலவி அதிகுல்லா உள்பட 33 பேர் கொல்லப்பட்டனர். இது தலீபான்களின் பெருத்த அடியாக அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்