விக்கிலீக்சுக்கு அமெரிக்க ரகசியங்களை கசிய விட்ட திருநங்கை செல்சியாவிற்கு தண்டனை குறைப்பு

விக்கிலீக்சுக்கு அமெரிக்க ரகசியங்களை கசிய விட்ட திருநங்கை செல்சியாவிற்கு தண்டனையை குறைத்து ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2017-01-19 09:45 GMT

வாஷிங்டன், 

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர், செல்சியா மேனிங் (வயது 29). திருநங்கை.

இவர், அமெரிக்காவின் அரசியல், ராணுவ ரகசியங்களை உலகுக்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அமெரிக்காவின் ரகசியங்களை கசிய விட்டார். இது அமெரிக்காவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய விதிமீறலாகவும் கருதப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, செல்சியா மேனிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 2013–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர் கன்சாஸ், போர்ட் லெவன்வொர்த்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கடந்த ஆண்டு 2 முறை தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சித்தார். உண்ணாவிரதமும் மேற்கொண்டார். அவருக்கு பாலினம் சார்ந்த பதற்றத்தை தணிக்க சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பதவிக்காலம் முடிந்து விடைபெற்றுச்செல்கிற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது கடைசி நடவடிக்கைகளில் ஒன்றாக செல்சியா மேனிங்கின் தண்டனையை குறைத்து நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதன் காரணமாக செல்சீ ஏறத்தாழ 30 ஆண்டுகள் முன்னதாக வரும் மே மாதம் 17–ந் தேதி விடுதலை செய்யப்படுகிறார்.

மேலும் செய்திகள்