அமெரிக்காவில் அகதிகள் நுழைய டிரம்ப் தடை

அமெரிக்காவினுள் அகதிகள் நுழைவதற்கு ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக தடை விதித்துள்ளார்.

Update: 2017-01-28 23:00 GMT
வாஷிங்டன், 

டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கனவு திட்டமான ‘ஒபாமா கேர்’ என்னும் மலிவு கட்டண சுகாதார காப்பீடு திட்டத்தில், அரசின் நிதிச்சுமைகளை குறைப்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு நிர்வாக உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த அதிரடியாக மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அதற்கு மெக்சிகோ பணம் தர மறுப்பதால், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு எடுத்துள்ளார்.

அகதிகளுக்கு தடை

அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்திருக்கிறார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது.

7 நாட்டினருக்கு விசா நிறுத்தம்

அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைய விடாமல் தடுப்பதே இதன் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

மலாலா வேதனை

அமெரிக்காவினுள் அகதிகள் நுழைவதற்கு டிரம்ப் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “வன்முறைக்கு பயந்து (அகதிகளாக) குழந்தைகள், தாய்மார், தந்தைமார் அமெரிக்கா வருவதற்கான கதவுகளை ஜனாதிபதி டிரம்ப் அடைத்திருக்கிறார். இதை கேட்கிறபோது, இதயமே நொறுங்கி விட்டது” என்று கூறினார்.

மேலும், “அகதிகளையும், குடியேறிகளையும் வரவேற்ற பெருமை மிக்க வரலாற்றில் இருந்து அமெரிக்கா திரும்புகிறது. அவர்கள்தான் உங்கள் நாட்டை கட்டமைக்க உதவினார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

டிரம்பின் உத்தரவுகளுக்கு ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்