பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் 6 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் உள்ள சுரிகாவ் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2017-02-11 20:36 GMT
மணிலா, 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் உள்ள சுரிகாவ் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானதாகவும், இது பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கமானது சுரிகாவ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களையும் கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். சுரிகாவ் நகரில் ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே நகரில் ஓட்டல் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. மேலும் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவிவருகிறது. நிலநடுக்கத்தால் சுரிகாவ் நகரில் உள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் விரிசல்கள் ஏற்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

முதலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்றுஅதிகாலை வரை தொடர்ச்சியாக 89 முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்