அமெரிக்காவில் சோகம்; விபத்தில் தப்பிய இந்தியர் மற்றொரு விபத்தில் பலி

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய இந்தியர் பிருத்விராஜ், போலீசாரிடம் தகவல் தெரிவிப்பதற்காக, காரில் இருந்த மொபைல் போனை எடுக்க திரும்பி வந்திருக்கிறார்.

Update: 2024-05-18 02:29 GMT

ஐதராபாத்,

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சார்லோட் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அவர் அப்பாராஜு பிருத்விராஜ் (வயது 30) என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் எல்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். பிருத்விராஜ், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் கார் ஒன்றில் சென்றபோது, திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், காரில் ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு வசதி இருந்துள்ளது. இதனால், விபத்தில் காரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் காரை விட்டு வெளியேறி சாலையோரம் நடந்து சென்றனர்.

எனினும், விபத்து பற்றி போலீசாரிடம் தெரிவிக்க காரில் இருந்த மொபைல் போனை எடுப்பதற்காக பிருத்விராஜ், திரும்பி வந்திருக்கிறார். அப்போது மற்றொரு வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இரவில் நடந்த இந்த விபத்தில் அவரை காணாமல், அவருடைய மனைவி மற்றும் தோழி ஆகியோர் நெடுநேரம் அந்த பகுதியில் தேடியுள்ளனர்.

இவருடைய சகோதரி பிரதியுஷா கூறும்போது, 2 ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய தந்தை உயிரிழந்த நிலையில், சகோதரர் விபத்தில் உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது. அது அதிக வலியை தருகிறது என கூறியுள்ளார்.

இதுபற்றி பிருத்விராஜின் உறவினரான விஸ்வநாத் கூறும்போது, அவருடைய நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய முன்வந்துள்ளனர். இன்று மாலை அவருடைய உடல் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் வசித்து வந்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் இறுதியில் இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் முக்கா நிவேஷ் (வயது 19) மற்றும் கவுதம் பார்சி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்த அவர்கள் இருவரும், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்