‘வாரம்தோறும் ஏவுகணை சோதனை’ வடகொரியா அதிரடி அறிவிப்பு

‘வாரம்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக வடகொரியா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2017-04-19 03:54 GMT
சியோல், 

5 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

வடகொரியாவை தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் விதத்தில், தனது கார்ல் வின்சன் கடற்படை அணியை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.கடந்த 2 தினங்களுக்கு முன் வடகொரியா மறுபடியும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தபோதும், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹான் சாங் ரையோல் பி.பி.சி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘‘நாங்கள் இனி வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் ஏவுகணை சோதனைகளை நடத்துவோம். அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது முழு அளவிலான போராக மாறும்’’ என எச்சரித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டம் போட்டால், நாங்கள் எங்களுக்கே உரித்தான விதத்தில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம்’’ என்று கொக்கரித்தார். வடகொரியா எங்களை சோதிக்க வேண்டாம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறிய நிலையில், வடகொரியா இப்படி கொக்கரித்திருப்பது பதற்றத்தை மேலும் தொடரச்செய்துள்ளது.

மேலும் செய்திகள்