ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை அமெரிக்கா அதிரடி

ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தாவா அமைப்பின் நல, வளர்ச்சி அமைப்பின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-05-12 21:30 GMT
வாஷிங்டன்,

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந் தேதி நடந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தின் நிறுவனம் மற்றும் பல தனிப்பட்ட நபர்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக ஹயத்துல்லா குலாம் முகமது (ஹாஜி ஹயத்துல்லா), அலி முகமது அபு துராப்,  இனயத் உர் ரகுமான் ஆகியோருக்கு எதிராக மட்டும் அல்லாது, இனயத் உர் ரகுமான் நிர்வகித்து வருகிற ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தாவா அமைப்பின் நல, வளர்ச்சி அமைப்பின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க நிதித்துறை அலுவலக இயக்குனர் ஜான் ஸ்மித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘பாகிஸ்தானில் இருந்து கொண்டு தலீபான், அல்கொய்தா, ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும், ஆள் எடுக்க உதவியும் அளித்து வருகிறவர்களையும், அமைப்புகளையும் ஒடுக்க வேண்டும் என்ற வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் மீது அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்