ஜெர்மனி, இந்தியா இடையே 12 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, ஏஞ்சலா பேச்சுவார்த்தையை தொடர்ந்து கையெழுத்து

பிரதமர் மோடிக்கும், ஜெர்மனி பிரதமருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் 12 ஒப்பந்தங்களிலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டன.

Update: 2017-05-31 00:00 GMT

பெர்லின்,

பிரதமர் நரேந்திர மோடி 4 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக நேற்று முன்தினம் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகருக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு அவருக்கு நேற்று பிரதமர் மாளிகையில், சம்பிரதாய முறையிலான வரவேற்பு, அணிவகுப்பு மரியாதையுடன் வழங்கப்பட்டது.

அப்போது ஜெர்மனி ராணுவ இசைக்குழுவினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி, இந்திய குழுவை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

12 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பின்னர் இரு தலைவர்களும் 4–வது இந்திய–ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே இணைய கொள்கை, வளர்ச்சி முயற்சிகள், நிலையான நகர்ப்புற மேம்பாடு, டிஜிட்டல்மயம், ரெயில்வே பாதுகாப்பு, தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு ஆகியவை தொடர்பாக 12 ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

நம்பகமான கூட்டாளி

பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடியும், ஏஞ்சலா மெர்க்கலும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:–

நாம் ஒருவருக்கு ஒருவராக படைக்கப்பட்டவர்கள். இது இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான தருணம். கண்டுபிடிப்பு, ஜனநாயக மதிப்பீடுகள் ஆகிய இரண்டும் நம் இரு நாடுகளின் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த உலகளாவிய நலனுக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமையும்.

ஜெர்மனியின் நம்பகமான கூட்டாளியாக விளங்குவோம் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு.

இந்திய பண்பாட்டின் அங்கம்

இந்தியாவை ஜெர்மனி, எப்போதும் வலிமைவாய்ந்த, ஆயத்தமான, தகுதிவாய்ந்த கூட்டாளியாக பார்க்க முடியும்.

நாங்கள் பரந்த, விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்திய, ஜெர்மனி கூட்டு, இரு நாடுகளுக்கும் உதவும். அது உலகத்துக்கும் உதவும். இந்திய, ஜெர்மனி உறவுகளில் பலன் தரத்தக்க முடிவுகளை எதிர்பார்க்கிறோம். நல்லதொரு முன்னேற்றத்தை, சிறப்பாக பொருளாதார உறவுகளில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம். பருவநிலை பாதுகாப்பு, இயற்கையுடன் இணைந்த நல்லிணக்கத்துடனான வாழ்க்கை, இந்திய பண்பாட்டின் அங்கம் ஆகும்.

‘பலனுள்ளதாக அமைந்தது’

இது இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், மனிதாபிமான விவகாரங்களானாலும், பிராந்திய வி‌ஷயங்களாக இருந்தாலும், உலகளாவிய பிரச்சினைகளாக இருந்தாலும், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடனான விவாதம், எனக்கு மிகவும் பலனுள்ளதாக அமைந்தது.

எங்கள் உறவுகளில் பிராந்திய, உலகளாவிய கண்ணோட்டம் உள்ளது.

இந்தியாவின் பொருளாதார முன்னுரிமை சாதனைகளில் ஜெர்மனியின் வர்த்தகம், தொழில் முறைக்கு முக்கிய பங்கு உண்டு.

ஜெர்மனியின் முதலீடுகள்

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ஜெர்மனியின் முதலீடுகள் குறிப்பிடத்தக்கவை.

இரு நாடுகளும் விளையாட்டு துறையில் குறிப்பாக கால்பந்தில் இணைந்து செயல்படுவோம்.

பயங்கரவாதம், மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை எதிர்த்து அனைத்து மனித சக்திகளும் இணைந்து போராட ஒன்றுபட வேண்டும். நாம் இரு நாடுகளும், பயங்கரவாத பிரச்சினைக்கு எதிராக இணைந்து செயல்படுவோம். நமது ஒத்துழைப்பில், இணைய பாதுகாப்பு, உளவுத்தகவல் பரிமாற்றம் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டறிக்கை

இந்தியா, ஜெர்மனி ஆகிய இரு தரப்பிலும் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதில், ‘‘அச்சுறுத்தல், உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் அடித்தளத்தைப் பற்றிய தங்களது பொதுவான கவலையை இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டி உள்ளனர். அதே நேரத்தில், பயங்கரவாத வன்முறை, அனைத்து வடிவிலும் கண்டிப்புக்குரியது’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘‘பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், அதற்காக நிதி அளிப்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பவர்கள், பயங்கரவாத குழுக்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதின் தேவையை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன’’ என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்