நியூசிலாந்தில் பஸ் பயணத்தில் கத்தி வைத்திருந்த சீக்கிய வாலிபரால் போலீசை வரவழைத்த சக பயணி

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்தில் ஒரு சீக்கிய வாலிபர் பஸ்சில் பயணம் செய்தார்.

Update: 2017-07-26 21:15 GMT
மெல்போர்ன், 

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்தில் ஒரு சீக்கிய வாலிபர் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் சீக்கிய மத வழக்கப்படி கிர்பான் என்று அழைக்கப்படுகிற கத்தியை வைத்திருந்தார். அதைக்கண்ட சக பயணி ஒருவர் தலைப்பாகை அணிந்து, தாடி வளர்த்து கத்தியுடன் காணப்பட்ட அவரது தோற்றத்தைக் கண்டு பயந்துபோய், போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து விட்டார்.

போலீசார் வந்து, அந்த சீக்கிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சீக்கியர் என்பதும், மத வழக்கப்படித்தான் கிர்பான் வைத்திருக்கிறார் என்பதுவும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “அவர் சட்டப்படி நியூசிலாந்தில் வாழும் பிரஜை. அவர் சீக்கிய மத வழக்கப்படிதான் கத்தியை வைத்துள்ளார் என தெரிந்தது. அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். இதையடுத்து அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார். மேலும் அவரிடம் இருந்து அந்த கத்தியை போலீஸ் கைப்பற்றவும் இல்லை.

இந்த சம்பவம் குறித்து அவருடன் பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி கூறும்போது, “நாங்கள் பஸ்சில் பயணம் செய்தபோது, எங்கள் பஸ்சை போலீஸ் கார், சைரனை ஒலித்துக்கொண்டு பின் தொடர்ந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் வந்த ஆயுதம் தாங்கிய போலீசார் பஸ்சை நிறுத்தி எங்களை சூழ்ந்து விட்டனர்” என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தால் அந்தப் பஸ்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்