ஆஸ்திரேலியாவில் பரபரப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதி முறியடிப்பு

ஆஸ்திரேலியாவில் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-07-30 23:30 GMT

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. அங்கு எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டின் முக்கிய நகரமான சிட்னி நகரத்திலும், அதன் புறநகரங்களான சாரி மலைப்பகுதி, லகெம்பா, வில்லே பார்க், பன்ச் பவுல் ஆகிய இடங்களில் ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் படையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையின்போது, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடைய இடங்களில் இருந்து, மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகிற கச்சாப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கையையொட்டி அந்த நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பயங்கரவாத நடவடிக்கை மூலம் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு சதித்திட்டத்தை பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் முறியடித்துள்ளனர்.

முன்னதாக போலீஸ் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். இந்த சோதனைகள், முக்கிய கூட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆகும்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும், உள்நாட்டு விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

நமது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புதான், ஆஸ்திரேலிய மக்களை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.

விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் சிலவற்றை பொதுமக்கள் நேரடியாக பார்க்க முடியும். சிலவற்றை நேரடியாக பார்க்க முடியாது. விமானப் பயணம் செய்கிறவர்கள், நம்பிக்கையுடன் பயணம் செய்ய முடியும்.

விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து விட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பு சோதனைகளை நடத்த முடியும். அவர்கள் எடுத்துச்செல்கிற உடைமைகள் குறைவாக இருக்கட்டும். அப்போதுதான் சோதனை எளிதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்