ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் உயிர் தப்பியவர் மீண்டும் உறுதி

ஈராக் நாட்டில் பணி புரிந்து வந்த 40 இந்தியர்கள் 2014-ம் ஆண்டு திடீரென மாயமானார்கள்.

Update: 2017-10-22 21:30 GMT
குர்தாஸ்பூர்,

ஈராக் நாட்டில் பணி புரிந்து வந்த 40 இந்தியர்கள் 2014-ம் ஆண்டு திடீரென மாயமானார்கள். அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இவர்களில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நகரை சேர்ந்த ஹர்ஜித் மசி என்பவர் மட்டும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பினார். பின்னர் நாடு திரும்பிய அவர் பயங்கரவாதிகளால் தன்னுடன் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்தார். என்றபோதிலும், மாயமான 39 பேரும் உயிருடன் இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அவ்வப்போது கூறி வருகிறது. இந்தநிலையில் ஹர்ஜித் மசி நேற்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு ஏன் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதும் மாயமான 39 இந்தியர்களைப் பற்றி ஏன் சரியான தகவலை தர மறுக்கிறது என்பதும் புரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது உண்மை என்றால், கடந்த 3 ஆண்டுகளாக அவர்களில் யாராவது ஒருவரை வெளியுலகிற்கு காண்பித்து இருக்கலாமே? ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்பதே உண்மை” என்றார்.

மேலும் செய்திகள்