சிரியாவில் கார் குண்டுவெடிப்பு; அப்பாவி மக்கள் 20 பேர் பலி

சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொதுமக்களில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2017-11-18 14:45 GMT

பெய்ரூட்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடர்ந்து 7–வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு கால் பதித்து, பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுகிற அநியாயம், நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டெயிர் அல் சோர் நகரில் நேற்று போரினால் இடம் பெயர்ந்த மக்கள் கூடி இருந்த இடத்தில் கார் குண்டு வெடித்தது. இதனால் அந்த இடமே குலுங்கியது. மக்கள் உயிர் பிழைப்பதற்காக நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

எனினும் இந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சனா செய்தி நிறுவன நிருபர் ஒருவர் கூறும்போது, ‘‘அல்ஜப்ரா–அல் கொனிக்கோ பகுதிகளுக்கு இடையே நடந்த இந்த கார் குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர். இதில் பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகம்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் அந்த பகுதியில் நடந்த 2–வது கார் குண்டுவெடிப்பு இது. கடந்த 4–ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் பலர் பலியானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்